கேப்டன் விஜயகாந்த் வரலாறு | Tamil Page

கேப்டன் விஜயகாந்த் வரலாறு

90ஸ் கிட்ஸ் களின் பிரபல கதாநாயகர்கள் வரிசையில் கமல், ரஜினி ஆகியோருக்கு இணையாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயராஜ் என்கின்ற விஜயகாந்த் ஒருக்காலத்தில் நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்களாக வசூல் வேட்டையில் இருந்தது.மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1952-ஆம் ஆண்டு அழகர்சாமி, ஆண்டாள் ஆகியோரின் மகனாக பிறந்தவர்தான் விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்டவர் கேப்டன் என்ற நம் அனைவராலும் அழைக்கப்படுகின்ற விஜயகாந்த். 

கேப்டன் விஜயகாந்த்

தன்னுடைய பள்ளிக் காலத்திலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.  தன்னுடைய அப்பா பல பள்ளிகளில் தன்னை சேர்த்தாலும் அவரால் பத்தாம் வகுப்பு தாண்டி படிக்க இயலவில்லை. ஆனால் சிறு வயதிலேயே நடிப்புக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர் அவர் சிறுவயதில் தான் காணும் அனைத்து திரைப்படங்களையும் அதில் வரும் வசனங்களையும் தன்னுடைய நண்பர்களுக்கு நடித்துக் காட்டி அவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் விஜயகாந்த். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலாத விஜயகாந்த்  தன்னுடைய தந்தை வேலை செய்த ஒரு அரிசி ஆலையில்  உதவியாளராக வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விஜயகாந்தின் கலைப்பயணம்

 நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சென்னையை நோக்கி புறப்பட்டுள்ளார். விஜயகாந்தின் முதல் படம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இனிக்கும் இளமை ஆகும்.விஜயராஜ் என்ற தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் நடித்தார். அதன் பின் அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றியின் உச்சத்தை அடைந்தன.

கேப்டனின் கலைப் பயணத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 18 படங்களை நடித்துள்ளார்.அவர் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது.விஜயகாந்தின் அரசியல் பயணம் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சிறுவயதிலேயே பங்கேற்றதன் மூலம் ஆரம்பித்துள்ளது. ஆனால் சினிமாத்துறை அவரின் முழு அரசியல் ஆளுமையை கண்டறிந்துள்ளது..

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கேப்டன். அதுவரை தீர்க்க முடியாத கடனில் இருந்தது நடிகர் சங்கம். தான் பொறுப்பேற்ற பிறகு எப்படியாவது நடிகர் சங்கத்தின் கடனை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார் விஜயகாந்த்.

அதனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடிகர்களையும், திரைக் கலைஞர்களையும் வைத்து பல்வேறு விழாக்களை நடத்தி அதன் மூலம் அதிக வருமானத்தை கொண்டு தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து உள்ளார் விஜயகாந்த்.விஜயகாந்தின் அரசியல் பயணம்: கேப்டன் விஜயகாந்த் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அதிகம் அக்கறை உடையவர்.

கேப்டன் விஜயகாந்த்

ஈழத்தில் போர் நடைபெற்ற போது அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரபாகரன் மீது அதிக பற்று உடையவர் நமது கேப்டன் விஜயகாந்த். அதனால் தனக்கு பிறந்த மூத்த மகனுக்கு விஜய பிரபாகர்  என்ற பெயரைச் சூட்டினார் கேப்டன். விஜயகாந்திற்கு தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. 2000ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்திற்கு  ஒரு தனிக் கொடியை அறிவித்தார் கேப்டன் விஜயகாந்த்.தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை தேர்தலில் நிற்க செய்தார். அவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி அடைந்தனர்.

தனது அரசியல் பயணத்திற்கு தன்னை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவர் பயன்படுத்திய முதல் ஆயுதம் சினிமா. அவர் நடிக்கும் படங்களில் அரசியல் சார்ந்த பல கருத்துகள் இடம் பெறும் வகையில் கதையை தேர்வு செய்தார். மக்கள் திரையில் வரும் விஜயகாந்தையும் நிஜ வாழ்க்கை விஜயகாந்த்யையும் இனணத்து பார்க்க தொடங்கினர். அதன் பின்னர் அரசியலில் முழுமையாக குதிக்கத் தொடங்கினார் விஜயகாந்த்.

தன்னுடைய கட்சியின் பெயர் அறிவிப்பு /கட்சி தொடக்க விழா போன்ற பல்வேறு மாநாடுகளை நடத்தினார். அவர் நடத்திய அனைத்துக் கூட்டங்களிலும் பெரும்பாலான மக்கள் அவரைக் காண குவியத் தொடங்கினர். 2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பெரிய மாநாடு நடத்திய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து புதிய கட்சியை தொடங்கினார்,இனி அனைத்து தேர்தல்களிலும் தனது கட்சி தேர்தலில் நிற்கும் என்ற அறிவிப்பை அறிவித்தார்.

முதல் தேர்தல்

கட்சி தொடங்கிய சில மாதங்களில் அதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளில் தனது கட்சி உறுப்பினர்களை தன்னிச்சையாக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் நின்றார். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் தேர்தலில் நின்றார்.  அந்தத் தேர்தலில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றார். ஆனால் மற்ற வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். வெற்றிகரமான தோல்வி என்று பெயர் எடுக்கும் வகையில் தான் கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே சுமார் 8.4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது.அதன்பின் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றது.

பிரமிக்கத்தக்க எதிர்க்கட்சி

2011ம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பிரதான கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலை மாறி மாறி வந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இருபத்தி ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது தேமுதிக.

விஜயகாந்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். இத்தேர்தல் மட்டுமே விஜயகாந்த் நினைவில் கொள்ளும் வகையில் அவருக்கு வெற்றிகளை பெற்றுத்தந்தது அதன்பிறகு நடைபெற்ற அனைத்து மக்களவை தேர்தல் களிலும், சட்டமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கட்சிகளை வரவில்லை. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் பல்வேறு நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகத் தொடங்கின.

கட்சியின் ஓட்டு சதவீதமும், செல்வாக்கும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. விஜயகாந்த் தற்போது தனக்குள்ள உடல் பிரச்சனைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாம் அனைவரும் ரசித்த கம்பீர குரலுக்கான கேப்டன் விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் 90s கிட்ஸ்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.