சாலை விதிகள் பற்றிய சில தகவல்

சாலை விதிகள் பற்றிய சில தகவல்

இன்றைய நகரமயமான வாழ்க்கையில் நம்முடைய பயணங்கள் நம்மை விட்டு பிரிக்க இயலாத அங்கமாக உருவெடுத்துள்ளது. பயணங்கள் பல வகைகளில் மேற்கொள்ளப்பட்டாலும், சாலை பயணமானது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில்  முக்கியமான, தவிர்க்க இயலாத பயணமாக மாறியுள்ளது.

சாலை விதிகள்

நம்  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பள்ளிக்கு செல்ல கல்லூரிக்கு செல்ல வேலைக்கு செல்ல என்று ஒவ்வொரு பயணத்திற்கும் நாம் சாலை பயணங்களை மேற்கொள்கின்றோம். சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் முதல் சாலையில் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய பல்வேறு சாலை விதிகள் உள்ளன.

சாலை விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக சமீப காலங்களில் மாறியுள்ளது. சாலைகளில் வாகனங்களை இயக்க தெரிவதை விட சாலை விதிகளை அறிந்திருப்பதே மிகவும் அவசியம். பாதசாரிகளும் அவர்களுக்கான சாலை விதிகளை அறிந்து இருக்க வேண்டும்..

வாகன ஓட்டிகளுக்கான சாலை விதிகள்

வாகன ஓட்டிகள் எப்பொழுதும் வாகனங்களை சாலையின் இடது பக்கத்தில் இயக்கவேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது.அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவது பெரும் குற்றமாகும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

சாலை விதிகள்

போக்குவரத்து சிக்னல்கள் மூன்று நிறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அவையாவன சிவப்பு, மஞ்சள், பச்சை.சிவப்பு விளக்கு எரியும் பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி நிற்க வேண்டும். மஞ்சள் விளக்கு எரியும் பொழுது தங்களின் பயணத்தை தொடங்குவதற்கு ஆயத்தமாக வேண்டும்.

பச்சை விளக்கு எரியும்போது வாகனத்தை இயக்க வேண்டும். சாலைகளின் அமைக்கப்பட்டிருக்கும் சாலை குறியீடுகள் ஆகியவற்றின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக வேகத்தடை ,ரயில்வே பாதை, குறுகிய வளைவு, அருகாமையில் பாலம் ,போன்ற பல்வேறு வகையான சாலை குறியீடுகள் அறிந்து அதற்கேற்றபடி வாகனங்களை இயக்குவது சாலச் சிறந்தது. முறையாக வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும்.

பாதசாரிகளுக்கான சாலை விதிகள்

பாதசாரிகள் எப்பொழுதும் சாலையில் வலது ஓரத்தில் நடந்து செல்ல வேண்டும்.சிக்னல்களை பாதசாரிகள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கும் பொழுதுதான் கடத்த வேண்டும். சாலைகளில் பாதசாரிகளுக்கு என்று வரையப்பட்டிருக்கும் zebra crossing இல் தான் கடக்க வேண்டும். பெருநகரங்களில் பாதசாரிகள் சாலைகளில் நடந்து செல்ல பாதசாரிகள் நடை மேடை அமைக்கப்பட்டிருக்கும். முடிந்தவரை நடைபாதைகளில் நடந்து செல்வதே சிறந்தது.

சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகள்

நம்மில் பலர் சாலைகளில் வண்டிகளை இயக்குவதை மட்டுமே அறிந்திருக்கிறோம். சாலை விதிகளை பொருத்தமட்டில் நாம் அறிந்ததே மிகவும் சிறியது மட்டுமே மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது நமக்கு மட்டுமல்லாமல் எதிர் திசையில் வருபவர்களும் விபத்தில் சிக்க  வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவதால்  விபத்து நடைபெறுகிறது.

சாலைகளில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லும்போது இரண்டு புறமும் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனித்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த பின்னும் வாகனங்களை இயக்குவதால் மறுமுனையில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கலாம். கனரக வாகனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக பாரம்  ஏற்றி வருவதனால் வாகனங்களை கட்டுப்படுத்த இயலாமல் விபத்தில் சிக்க நேரிடலாம்.

விபத்தினை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை கனரக வாகனங்களில் ஏற்றி செல்வது தவிர்க்கப்பட வேண்டும். உதாரணமாக கூர்மையான முனை கொண்ட கம்பிகள், கண்ணாடி பொருட்களை வாகனங்களை விட்டு வெளியே தெரியும்படி கொண்டுவருவதால் அதிகளவில் விபத்துக்கள்ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிப்பதை பின்பற்ற வேண்டும்.

சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் சட்ட சிக்கல்கள்

பொதுவாக பெரும்பாலானோரால் மீறப்படும் சாலை விதிகள் குறிப்பிட்ட வேகத்தை விட மிக அதிகமாக வாகனங்களை செலுத்துவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, செல்போனில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்குவது, கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுவது, வரையறுக்கப்பட்ட அளவைவிட பாரம் ஏற்றி செல்வது, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயணிகளை அழைத்து செல்வது போன்றவை ஆகும்.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அந்த இடத்திலேயே அபராதம் விதித்து ரசீது கொடுக்கலாம். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை கண்டறிந்தால் சிறையில் அடைக்கும் சட்டமும் உண்டு. அவர்கள் சட்ட விதி எண் 185கீழ் கைது செய்யப்படுவார்கள். வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தினால் வாகன ஓட்டிகள் 50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் .மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.