இயற்கையின் மிச்சம் தனுஷ்கோடி | Dhanushkodi

இயற்கையின் பேரழிவால் ஒரே நாளில் ஒரு நகரமே நரகமாக மாறியது. அந்த நகரத்தின் பெயர் தான் தனுஷ்கோடி ( Thanushkodi ). தனுஷ் என்றால் வில் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வில்லைப் போன்ற கடற்கரையை கொண்ட ஒரு நகரமாக விளங்கியதாலும், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்திருந்த காரணத்தினாலும் இப்பெயர் பெற்றது. பண்டைய காலம் முதலே நம் தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிகத் துறைமுகமாக விளங்கியது தனுஷ்கோடி.

Dhanushkodi

இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதியும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பொருட்கள் இறக்குமதி செய்தனர். மக்களின் குரல்கள் எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் தனுஷ்கோடியில். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தனுஷ்கோடி ( Thanushkodi ). 1964 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்நகரம் செழித்தோங்கி இருந்தது. ஒரு இரவு ஓர் மலை ஒரு ஊரின் வரலாற்றை திருப்பி எழுதக்கூடும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. தங்களின் வாழ்வையே புரட்டிப் போடும் நிகழ்வு நடக்கக் கூடும் என்று அறியாமல் தனுஷ்கோடி மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை பற்றி துளிகூட அறியாமல்…

துறைமுக நகரம் தனுஷ்கோடி :

மன்னர்கள் காலத்திலும் நம் இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்திலும் கிழக்காசிய நாடுகளில் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி நகரம் பயன்பட்டு வந்தது.அதிலும் ஆங்கிலேயர்கள் இலங்கையையும் இந்தியாவையும் ஆட்சி செய்த பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் பயணங்கள் செய்வதற்கும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வணிக ரீதியிலான செயல்களை மேற்கொள்வதற்கு ஏற்ற நகரமாக தனுஷ்கோடி விளங்கியது. சுமார் இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகரம் நகரம் .. மத்திய, மாநில அரசு துறைகளில் செயல்பட்டு வந்தன.
தமிழகத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழி போக்குவரத்தும் இருந்து வந்துள்ளது. சீதாபிராட்டி இலங்கை மன்னன் இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட போது அவரை மீட்டு இந்தியா வருவதற்காக ராமபிரான் இந்திய நிலப் பகுதியையும் இலங்கையையும் இணைப்பதற்காக ஒரு தரைவழிப் பாதையை அமைக்க எண்ணியதாகவும் வானரகங்களின் உதவியுடன் அப்பாலத்தை கட்டியதாகவும் புராணத்தில் கூறப்படுகிறது. அப்பாலம் இன்றும் தனுஷ்கோடி கடற்பகுதியில் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

புயலும் ஆழிப்பேரலையும்:

1964 ஆம் ஆண்டு மக்களுக்கு சுனாமி என்றால் என்னவென்று கூட தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.பெருங்காற்று இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது யாரால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒன்று. 1964 ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியது. அந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறியது.

அப்புயலானது மெதுவாக நகர்ந்து நகர்ந்து தமிழகத்தின் கடற் பகுதியை நோக்கி வந்தது. இன்றைய காலத்தில் ஒரு புயல் உருவானதிலிருந்து அப்புயல் கரையை கடக்கும் வரை அப்புயல் எங்கு உள்ளது, எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன . எடுத்துக்காட்டாக பல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் ,வானிலை அறிவிப்பு செய்திகள் ,வானிலை அறிவிப்பு நிலையங்கள் என்று பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அக்காலத்தில் தொலைக்காட்சி என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்துள்ளது .செய்தித்தாள்கள் மற்றும் வானொலி மட்டுமே தகவல் தொடர்பு சாதனங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தன. புயல் இலங்கையின் பெரும் பகுதியை சேதாரப்படுத்திய கையோடு தனுஷ்கோடியை நோக்கி நகர்ந்து வந்தது. டிசம்பர் 23 மற்றும் 24 தேதி நள்ளிரவில் புயல் தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தது. புயலினால் மழை பெய்யக்கூடும் என்பதை தனுஷ்கோடி மக்கள் அறிந்திருந்தனர். ஆனால் பேய் காற்றோடு ஆழி பேரலைகள் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி வெள்ளத்தில் காணாமல் போகும் என்பதை அறியாமல் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 20 அடி உயரம் வரை எழும்பிய அலைகள் தனுஷ்கோடிக்குள் புகுந்து கொத்து கொத்தாக மக்களை அள்ளிக் கொண்டு சென்றது.தங்களுக்கு வாழ்வளித்த கடலே தங்கள் வாழ்வை பறித்து செல்லும் என்பதை தனுஷ்கோடி மக்கள் அறிந்திருக்கவில்லை.

‘சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு புயலின் தீவிரம் அறியாமல் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலானது பாம்பன் பாலத்தை கடந்து கொண்டிருக்கும் பொழுது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் 115 பயணிகளுடன் கடலுக்குள் புகுந்து உருக்குலைந்து போனது.இதில் கொடுமை என்னவென்றால் இப்படி ஒரு பெரும் விபத்தை பற்றி கூட யாரும் அறிந்திருக்கவில்லை. மறுநாள் காலையில் ரயிலின் பாகங்கள் கடல் பகுதியில் மிதக்க தொடங்கிய பின்பு தான் கொடூரத்தின் வீரியத்தை மக்கள் அறிந்தனர்.தனுஷ்கோடியில் வாழ்ந்த 2000 மக்களையும் தனுஷ்கோடிக்கு ஆர்வத்துடன் சுற்றுலாவிற்கு வந்த மக்களையும் தன் கொடூர பசிக்கு இரையாக்கி யது கடல் அன்னை. 115 பயணிகளில் 23 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் தாக்கிய மறுநாள் அங்கு உதவி செய்யக்கூட யாரும் முடியாத நிலையில் தனுஷ்கோடி இருந்தது. இந்திய நாட்டில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தனுஷ்கோடியை சுற்றி ஒரே வெள்ளம். போக்குவரத்திற்கு இருந்த சாலைகளும் கடலுக்குள் மூழ்கின. ரயில் பாதையும் கடலில் மூழ்கியது. தனுஷ்கோடியை தொடர்பு கொள்வதற்கு ஒரே வழியாக வான்வெளி பாதை மட்டுமே இருந்தது.தனுஷ்கோடியில் புயலில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் உடைந்த படகுகளை கொண்டு பாம்பன் வந்தடைந்தனர். தனுஷ்கோடியில் இருந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் விமானங்களின் மூலம் அளிக்கப்பட்டது.

தனுஷ்கோடியின் இன்றைய நிலை:

புயலுக்குப் பின்னர் தனுஷ்கோடியை இந்திய அரசாங்கம் மக்கள் வாழ்வதற்கு தகுதியே இல்லாத ஒரு பகுதியாக அறிவித்தது. பண்டைய காலங்களில் செல்வ செழித்தோங்கி விளங்கிய பகுதியில் சிதிலமடைந்த கட்டடங்களும் உடைந்து போன படங்களின் துண்டுகளும் மட்டுமே மிஞ்சி இருந்தது.ஆனாலும் தாங்கள் வாழ்ந்த ஊரை மறக்காமல் இன்றும் சில மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர் அவர்கள் முக்கிய தொழிலாக மீன் பிடிப்பதை கொண்டுள்ளனர். புயல் தாக்கி ஒரு நகரமே அழிந்தததை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 55 கோடி செலவில் அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டது. அதன்பின் அங்கு ஒரு மணிக்கு ஒரு பேருந்து என்று இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல்களில் குளித்தும் , புயலின் சோக வடு நீங்காமல் இன்றும் இருக்கும் கட்டிடங்களின் எச்சங்களை கண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.