Kallanai Dam | கல்லணை அணையின் சிறப்பு

பண்டைய தமிழர்கள் நீர் மேலாண்மையில் செழித்தோங்கி இருந்தனர் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. மழையாய் பெய்யும் நீரை சேமித்து வைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நாம் வாழும் வீடுகளில் தொடங்கி வழிபடும் கோவில்கள் வரை மழை நீரை சேமித்து வைப்பதற்கு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வாழ்ந்து வந்துள்ளனர் பண்டைய தமிழர்கள். வீதிகளில் முற்றம் என்னும் பகுதி அமைத்து அங்கு பெய்யும் மழை நீரை பெரிய பாத்திரங்களில் சேமித்து வைத்த பழக்கம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து உள்ளது.

Kallanai Dam

அதேபோல் கோயில்களுக்கு முன் குளத்தை வெட்டி அங்கு அவ்வூரில் பெய்யும் மழைநீரை சேர்த்து வைத்துள்ளனர். வயல்வெளிகளில் உழவுக்கு நீரை பயன்படுத்த, அதற்கு ஏற்றவாறு ஊர்களின் எல்லைகளில் கண்மாய்களை வெட்டி மழை நீரை சேமித்து கோடைகாலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். சிறிய அளவில் மழை நீரை சேமிப்பதற்காக குளம் ,குட்டை ,கண்மாய், ஏரி ஆகிய பல்வேறு நீர்நிலைகளை தமிழர்கள் அமைத்துள்ளனர்.

அவ்வாறு பெரிய அளவில் மழை பெய்து ஆறுகளில் பாய்ந்து கடலில் சங்கமமாகும் நதி நீரை சேமித்து வைப்பதற்காக ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரை சேமித்து வைத்து அதனை உழவிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். நாட்டை ஆண்ட அரசர்கள் தங்கள் பெயர்கள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்பதற்கு எவ்வித இயற்கைப் பேரிடர்களால் அழிக்க முடியாத அளவில் பிரம்மாண்டமான அணைகளை கட்டி அதில் ஆறுகளில் பகுதியை சேமித்து வைத்து உள்ளனர். முல்லைப் பெரியாறு அணை ,வைகை அணை, கல்லணை ஆகியன நாம் அறிந்த மிகப்பெரிய அணைகளாகும்.சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றுக்குக்கு குறுக்கே கட்டப்பட்டதே கல்லணை ஆகும்.

கல்லணையின் அமைவிடம்:

கரிகால சோழ மன்னனால் கட்டப்பட்ட கல்லனை சோழ இராஜ்ஜியத்தின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தோகூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பரந்து விரிந்தோடும் அகண்ட காவிரி ஆறு முக்கொம்பு என்னும் இடத்திலிருந்து வடக்கு திசையில் கொள்ளிடம் என்னும் ஆறாகவும், தெற்கு திசையில் காவிரி நதி யாகவும் பாய்ந்து ஓடுகிறது.

Kallanai Dam

இவ்வாறு இரண்டாக பிரியும் இடத்தில் மேலணைஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.திருவரங்கம் என்னும் ஆற்றுத்தீவு கொள்ளிடத்திற்கும் காவிரி ஆற்றிற்கும் இடையே அமைந்துள்ளது.அந்த ஆற்று தீவில் இருந்து காவிரி ஆறு பாய்ந்து கல்லணையை வந்து சேர்கிறது. பின்பு காவிரி நான்கு கிளை ஆறுகளாக பிரிகிறது. நான்கு கிளை ஆறுகள் முறையே கொள்ளிடம் ஆறு, புது ஆறு, வெண்ணாறு, காவிரி ஆகியன ஆகும். கல்லணையில் 4 ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

கல்லணையும் வரலாறும்:

கல்லணை கிபி ஒன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பருவமழை காலத்தில் பெரு மழை பெய்து காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு இலட்ச கனநீர் பாய்ந்து விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் பெருமளவில் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இதனை தடுப்பதற்கு வெள்ள காலங்களில் நீரை தேக்கி வைப்பதற்கு பெரிய அணை ஒன்றை கட்ட கரிகாலச்சோழன் முடிவு செய்தான்.

கல்லணையும் கட்டடக்கலையும்:

பல அறிவியல் வல்லுனர்கள் இன்றும் வியந்து பார்க்கும் அளவிற்கு கல்லணையை கட்டியுள்ளனர். மணல் பகுதியாக காவிரி ஆற்றின் குறுக்கே இவ்வளவு பெரிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது எப்படி என்பதை அறிய இன்றைய பொறியியல் வல்லுநர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் எவ்வாறு மணல் பகுதியான இடத்தில் இவ்வளவு பெரிய அணைகளை கட்ட முடிந்தது என்பதை கண்டறிந்து உள்ளனர் இன்றைய வல்லுநர்கள். கல்லணை கட்டப்பட்ட இடத்தில் பூமிக்கு அடியில் 12 அடி ஆழ குழி தோண்டியபோது இதற்கான விடையை கண்டறிந்தனர்.

Kallanai

பூமிக்கு அடியில் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைக் கற்களை அடுக்கி அதன்மேல் அணையை கட்டி உள்ளனர். கல்லணையின் அடிப்பகுதி பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. பாறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை களிமண்ணைக் கொண்டு பூசியுள்ளனர். கல்லணையின் அடித்தளம் பாறை மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டது.

கல்லணை அமைப்பதற்கு முன்பு அவ்விடத்தில் மிகப் பெரிய பாறைகளை போட்டு வைத்துள்ளனர். ஆற்று வெள்ளம் மணலை அடித்துச் சென்று அப் பாறைகளை பதியச் செய்தது. இவ்வாறு பூமிக்கு கீழே சுமார் 12 அடி ஆழம் வரை பாறைகளை போட்டு வைத்துள்ளனர்.

அணையை சுண்ணாம்பும் , பாறைக் கற்களை கொண்டும் கட்டியுள்ளனர். வெறும் கற்களை கொண்டு கட்டியதால் இவ்வணை கல்லணை என்னும் பெயர் பெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை என்றாலும் இன்றும் பயன்பாட்டில் உள்ள மிக பெரும் பழமையான அணையாக திகழ்கின்றது கல்லணை.
கல்லணை 5.4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.329 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் உடையது கல்லணை.

கரிகாலச் சோழன் மணிமண்டபம் :

இன்றும் டெல்டா மாவட்டத்தில் விவசாயம் காவிரி ஆற்று நீரை நம்பி மட்டுமே உள்ளது. பருவ காலங்களில் பெய்யும் மழைநீரைத் தேக்கி வைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையே இன்றும் காவிரி ஆற்று நீரை தேக்கி வைக்க பயன்படுகிறது என்பது வியப்பான செய்தி மட்டுமல்லாமல் உண்மையும் அதுவே.

அன்று கரிகாலச் சோழன் கல்லணை மட்டும் கட்டாமல் இருந்திருந்தால் “தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் ” என்று நாம் பாட புத்தகங்களில் படிக்கும் நிலை ஏற்படாமல் கூட இருந்திருக்கலாம்.கரிகாலனின் பெருமையையும் அவர் விவசாயத்திற்கு செய்த பெரும் உதவியையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக தமிழக அரசு திருக்காட்டுப்பள்ளி செல்கின்ற வழியில் காவிரி ஆற்றின் இடது புற ஓரத்தில் கரிகால மன்னன் யானை மேல் அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலையுடன்ஒரு மண்டபத்தைக் கட்டி வைத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *