Keeladi Excavation | கீழடி அகழாய்வு 2019
Keeladi Excavation | கீழடி அகழாய்வு 2019
அகழாய்வு : ஒர் இடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்தில் கண்டு எடுக்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தி , அப்பொருள்களின் தொன்மையை ஆராய்வதே தொல்லியல் ஆய்வு ஆகும்.

அகழ்ந்து ஆராய்வதே அகழாய்வு. தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் களம் தொல்லியல் களம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இப்பொழுது காணலாம்.
சிந்து சமவெளி நாகரிகம்
தொல்லியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு தான் சிந்துசமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு ஆகும். இவ்வுலகின் மிகத் தொன்மையான நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்துள்ள என்பது அனைவரும் அறிந்ததே. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 3000 முதல் 2500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் சிந்து சமவெளி காலம் ஆக இருக்கலாம் என்று தொல்லியல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அக்காலத்திலேயே மக்கள் நகர நாகரீக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதே சிந்து சமவெளி நாகரிகத்தின சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் சிந்து ஆற்றின் இரு புறமும் அமைந்த நகரங்களின் வாழ்வியல் முறை ஆகும்.
கீழடியும், அகழாய்வும்
வைகை ஆற்றின் ஓரத்தில் சிந்து சமவெளியை ஒத்த ஒரு நாகரிகம் இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் இடம் தான் கீழடி . தென் தமிழகத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான வைகை ஆறு தேனி மாவட்டத்தில் ஆரம்பித்து மதுரை ,சிவகங்கை மாவட்டங்களில் பாய்ந்தோடி இராமநாதபுர மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.

மதுரைக்கு அருகில் சிவகங்கை எல்லையில் அமைந்துள்ள ஊர்தான் கீழடி. 1974 ஆம் ஆண்டு கீழடியில் மாணவன் ஒருவனால் தற்செயலாக கண்டு எடுக்கப்பட்ட பொருள் ஒன்றை தனது வரலாற்று ஆசிரியரிடம் காண்பித்தார். அன்று யாரும் அறியவில்லை அந்த கண்டெடுப்பு இந்திய வரலாற்றை திருப்பி போடக் கூடியது என்று. அன்று தாங்கள் இலக்கியங்களில் படித்தவற்றை தான் இன்று தங்கள் கண்களால் காண்கிறோம் என்று நம்பினர் கீழடி மக்கள்.
40 ஆண்டுகள் கழித்து 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தொல்லியல் அகழாய்வை கீழடியில் தொடங்கியது இந்திய அரசு.அதன் நோக்கம் வைகை ஆற்றுப்படுகையில் உருவான நாகரிகத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஆகும்.
ஆய்வு மேற்கொள்ளபடும் இடம்
மதுரை மாவட்டத்தில் இருந்து தென் கிழக்கே அமைந்த ஊர் தான் கீழடி. கீழடியில் இருந்து கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மணலூர் கண்மாய் அமைந்துள்ளது. அக்கண்மாயின் மேற்கரையில் அமைந்துள்ளது பள்ளிச் சந்தை எனப்படும் தொல்லியல் மேடு. இவ்விடத்தில் தான் பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை 2015 ஆம் ஆண்டு முதல் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஆறு கட்டங்களாக ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளன. சுமார் எட்டு ஏக்கர் அளவில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

வைகை ஆற்றினை மையாக கொண்டு ஆற்றில் இருபுறமும் சுமார் 30 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களை தங்களின் ஆய்வுக் களமாக மாற்றியது தொல்லியல் துறை. அவ்வாறு ஆய்வு செய்ததில் சுமார் 293 பகுதிகள் தொல்லியல எச்சங்கள் நிறைந்த பகுதிகளாக இருந்தன. களஞ்சியங்கள், கோவில்கள், துறைமுகங்கள் என அவற்றை அடையாளம் செய்ய இயன்றது.
கீழடியில் இதுவரை ஆறு கட்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்டு எடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் கார்பன் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த பகுப்பாய்வுகளை உலகின் மிகச்சிறந்த பகுப்பாய்வு நிறுவனங்கள் மேற்கொண்டன. அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் இங்கு கண்டு எடுக்கப்பட்ட பொருள்கள் கரிம பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு அதன் வயதினை கணக்கிட்டனர். ஆய்வின் அடிப்படையில் அப்பொருட்களின் காலத்தை கணக்கிட்டு வருகின்றனர் வல்லுநர்கள்.
ஆய்வின் முக்கியத்துவம்
தமிழ் சமூகம் ஓர் இனக்குழுவாக தான் அறியப்பட்டுள்ளது. அவர்கள் நகர நாகரீக வாழ்க்கை வாழ்ந்தாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இலக்கியங்களில் கூறப்படும் கூற்றுகளை வரலாற்றுச் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலக்கியங்களில் கூறப்படும் கூற்றுகள் கற்பனைகளாக கூட இருக்கலாம் என்பதே காரணம்.

கீழடியில் இருந்து பெறப்பட்ட பொருட்களை காணும் பொழுது தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்று உள்ள வர்ணனைகள் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையே என்பது உறுதி ஆகி உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, “கீழடியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் வாயிலாக நாம் தமிழக வரலாற்றை மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்” என்று” 2016 ஆம் ஆண்டு வரலாற்று அறிஞர் ரொபிலா அவர்கள் கூறியுள்ளார்.
கண்டுபிடிப்புகள்
கீழடியில் மண் பானை ஓடுகளின் குவியல் இரு வெவ்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தறிகளில் தொங்கவிடும் கருங்கல் ஆகியன கிடைத்திருக்கிறது . இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது .

பெண்கள் அணிந்த தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளது. தந்தத்தில் செதுக்கப்பட்ட சீப்புகள், சதுரங்கக் காய்கள்,பகடைக்காய்கள், மனித உடல் பாகங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் ஆகியன கிடைக்க பெற்றுள்ளன. நீர் வழிப்பாதைகள் முழுமையான கட்டமைப்பை கொண்டவையாக இருந்துள்ளன. கழிவுநீர் வடிகால், சுடுமண் கிணறுகள், செங்கள் சுவர்கள், இரும்பு ஆயுதங்கள், உடைந்த வாள் ஆகியனவயும் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கீழடியிலேயே காட்சிப்படுத்துவதற்காகவே அருங்காட்சியகம் அமைக்க இந்திய அரசாங்கம் நிதியும், இடமும் ஒதுக்கியுள்ளது.
6ம் நூற்றாண்டில் தோன்றியது தான் சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றை பொறுத்த வரைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக நாகரிகம் இருந்தாக சான்றுகள் கிடைத்ததில்லை.

ஆனால் கீழடியில் இருந்து பெறப்பட்ட சான்றுகள் தமிழர் நாகரிகம் கிறித்து பிறப்பதற்கு முன் ஆறாம் நூற்றாண்டை சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.
Recent Comments