Karthikai Deepam | கார்த்திகை தீபத் திருநாள்
Karthikai Deepam | கார்த்திகை தீபத் திருநாள்
இரவின் துணையான இருளை நம்மை நெருங்கவிடாமல் நம்மை சுற்றி வெளிச்சத்தை பரப்பும் தீபத்தை வழிபடும் திருநாளாக விளங்குகிறது கார்த்திகை தீபத் திருநாள்.

ஒன்றோடு ஒன்று விளையாடும் சுடர்ஒளியில் முழு நிலவாய் மலர்ந்து இருக்கும் சந்திரனை வணங்கும் திருநாள் ஆகும். இவ்விழாவிற்க பல ஐதீகங்களும், அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன.
கார்த்திகை தீபமும் ஐதீகமும்:
கார்த்திகை தீபத் திருநாள் அன்று பஞ்ச தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஜோதி வடிவாய் அண்ணாமலையாரை இன்றும் மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கார்த்திகை மாத பெளர்ணமி அன்று தீபம் ஏற்றி வழிபட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்களால் நம்பப்படுகின்ற காரணம் இதுதான் …..
படைக்கும் தெய்வமான பிரம்மனுக்கும் , காக்கும் தெய்வமான விஷ்ணுக்கும் இடையில் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி வந்தது. தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை தெரிந்துக் கொள்ள விஷ்ணுவும், பிரம்மனும் சிவனிடம் சென்றனர். சிவப்பெருமானுக்கோ இவர்களின் செய்கை கடுங்கோபத்தை உண்டாக்கியது. இருப்பினும் அவர் முடிவினை தெரிவித்து இருவருக்கும் பாடம் புருக்க விரும்பினார். அதன்படி உங்கள் இருவரில் யார் முதலில் என் உச்சியையும் , நுனியையும் கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் என்று கூறினார்.

இதனை அடுத்து விஷ்ணுவும் , பிரம்மனும் அவ்வாறு செய்ய முடிவு செய்தனர். ஆகையால் பிரம்மன் அன்ன வாகனத்தில் சிவப்பெருமானின் உச்சியைக் காண சென்று விட்டார். விஷ்ணுவோ, வராக அவதாரம் எடுத்து சிவனின் அடியைக் காண சென்று விட்டார் ஆனால் சிவப்பெருமான் பிரம்மனுக்கும் , விஷ்ணுக்கும் தகுந்த பாடம் புகட்ட எண்ணினார்.அதனால் தீப்பிளம்பாய் விஷ்ணுக்கும், பிரம்மனுக்கும் தெரியும்படி மாறினார். விஷ்ணுவால் எவ்வளவு அடியில் சென்றாலும் சிவப்பெருமானின் கால் நுனியைக் காண இயலவில்லை.
அதே போல் பிரம்மனால் எவ்வளவு உயரம் பறந்தாலும் சிவனின் உச்சியை காண இயலவில்லை. விஷ்ணு பெருமாள் தான் தோல்வியை சிவப்பெருமானிடம் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மனோ சிவனின் தலையில் இருக்கும் தாழாம்பூவை தனக்கு ஆதாரவாக பொய் கூறும்படி செய்தார். இதனால் கோபம் அடைந்தார் சிவன். அதனால் பிரம்மனுக்கும், தாழம்பூக்கும் சாபம் விடுத்தார்.

அந்த சாபம் என்னவென்றால், பிரம்மனை எந்த கோவிலும் வைத்து வழிபடக்கூடாது. அது போல் தாழம்பூவை கொண்டு எந்த தெய்வத்தையும் வணங்கக்கூடாது என்பதே ஆகும். அதனால் தான் நம்மால் இன்றும் எந்த ஒரு கோவிலும் பிரம்மாவை காண இயலாது. தாழம்பூவை கொண்டு எந்த ஆலயத்திலும் பூஜைகள் நடைபெறாது என்பது முன்னோர்களின் கூற்று .அனைத்து சிவலாயங்களிலும் இந்நிகழ்வு சிற்பமாக இருக்கும். அன்று பிரம்மனும் , விஷ்ணுவும் நாங்கள் இன்று உங்களை ஜோதியாக தரிசித்தபடி அனைத்து முனிவர்களுக்கும் காட்சியளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் தான் கார்த்திகை திங்கள் பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு நம்பிக்கை ஒன்றும் இப்பெருநாளை பற்றி இன்றும் உள்ளது. அதன் படி சிவப்பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு குழந்தைகள் சரவணப்பொய்கையில் பிறந்ததாகவும், அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாகவும், கார்த்திகை திங்கள் முழு நிலவன்று பார்வதிதேவி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக்கி கார்த்திகேயன் என்று பெயர் சூட்டியதாகவும், அதனை தான் நாம் கார்த்திகையாக கொண்டாடுவதாகவும் நம்பப்படுகிறது.
கார்த்திகையும், அறிவியலும்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றாத வீட்டை காண்பது அரிது.. அதற்கு பின்னால் கூறப்படும் அறிவியல் காரணம் இதுதான்.
கார்த்திகை மாதம் என்பது பனியும் மழையும் சேர்ந்தே இருக்கும் மாதம் என்பது நாம் அறிந்ததே. பனியும் , மழையும் இணைந்த இந்த காலத்தில்தான் பயர்களில் பூச்சிகள் தாக்க கூடிய பருவம். வடகிழக்கு பருவமழை முடிந்த இக்காலத்தில் தான் பயிர்களை தாக்க கூடிய பூச்சிகளின் இனப்பெருக்க காலம் ஆகும்.

இப்பூச்சிகள் பயிர்களை தாக்கி விளைச்சலை பாதிக்ககூடியது. பொதுவாக பூச்சிகள் வெளிச்சத்தை நோக்கி கவர்ந்து செல்லக்கூடியவை. அக்காலத்தில் தீபங்களில் விளக்கெண்ணெய், வேப்பெண்ணய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றால் கவர்ந்து இழுக்கப்படும் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. கொசுக்களும் தீபத்தில் இருந்து வெளிவரும் பூகையால் அழிக்கப்படுகின்றன.. அதனால் தான் நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு உதவும் விதமாக கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டுள்ளனர்.
இன்றும் சில கிராமங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும் பழக்கம் உள்ளது. கார்த்திகை தீபத் திருநாள் அன்றோ அல்லது இரண்டு, மூன்று நாட்களில் பெரும் அளவில் தீ முட்டி எரிப்பர். இதனால் பெரும் அளவில் பூச்சிகள் அக்காலத்தில் அழிக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை
கார்த்திகை தீபம் அன்று வீட்டை தூய்மை செய்து மாலை நேரத்தில் அகல் விளக்குகளில் விளக்குகளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றுவர். வீட்டு வாசலில் கோலமிட்டு அக்கோலத்திலும் தீபம் ஏற்றி வைப்பர். வீடு முழுவதும் அன்று அகல் ஒளியில் அழகாய் காட்சி அளிக்கும்.
சிறுவர்கள் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை மிச்சமாக்கி சேமித்து வைத்து கார்த்திகை தீபம் அன்று வெடித்து மகிழ்வர். ஏற்றிய விளக்குகள் காற்றில் அணைந்து விடாமல் அதனை பார்த்துக்கொள்வதே அன்றைய நாளின் மிகப் பெரிய சவாலான செயல் ஆகும்.

கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கான ஆன்மீகக் காரணமும் அறிவியல் காரணமும் அறிந்த நாம் அதனை முறையாக கொண்டாடுவதே சிறந்தது. இன்று அகல் விளக்குகள் பயன்படுத்தாமல் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தும் பழக்கம் பெருகி வருகிறது.
கார்த்திகை தீபத் திரு நாளை நோக்கி குயவர்கள் அகல் விளக்குகளை பெரும் அளவில் தயாரிக்கின்றனர். ஆகையால் முடிந்த அளவில் மண் விளக்குகளை பயன்படுத்தி விளக்குகளை ஏற்றி கடவுளை வழிபடுவதே இயற்கைக்கும் நமக்கும் நல்லது.
Recent Comments