Ayutha Poja | ஆயுத பூஜை பண்டிகை
Ayutha Poja | ஆயுத பூஜை பண்டிகை
வடமாநிலங்களில் நவராத்திரியாகவும், தென்மாநிலங்களில் கொலுவாகவும் கொண்டாடப்படும் பண்டிக்கையில் முக்கியமான நாள் தான் (Ayutha Poja) ஆயுத பூஜை.

வட மாநிலங்களில் இந்த ஒன்பது நாளும் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களை வழிபடுகின்றனர். தென் மாநிலங்களில் கொலு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அதிபதியான துர்க்கையையும் ,
- அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான லெட்சுமியையும்,
- அடுத்த மூன்று நாட்கள் கல்வியின் அதிபதியான சரசுவதியையும் வழிபடுகின்றனர்,
- பத்தாவது நாள் விஜயதசமி ஆகும்.
மேற்கூரியவை பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்று ஆகும். ஆனால் ஆயுத பூஜையைக் கொண்டாட பல்வேறு மக்கள் பல காரணங்களையும், கதைகளையும் கூறி வருகின்றன. ஒரு சில மக்கள் (Ayutha Poja) ஆயுத பூஜை மன்னர் அசோகர் காலத்தில் இருந்து தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. என்று கூறுகின்றனர்.
தன் வாழ்நாளில் மறக்க முடியாத போரான கலிங்கப்போருக்குப் பின்னர் இனிமேல் தான் போர் புரிய மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டார். அப்போரில் பயன்படுத்தி இரத்தக்கறைப் படிந்த ஆயுதங்களை கழுவி தூய்மைப்படுத்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடவுளை வழிபட்டார்.
அனைவரையும் அதனை செய்யச் சொன்னார். மக்களும் அரசரின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு வருடந்தோறும் செய்ததாகவும், அதுவே இன்றைய ஆயுத பூஜை என்றும் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.
இன்னும் சிலர் ஆயுத பூஜையை பஞ்ச பாண்டவர்களின் வனவாசத்தின் ஒரு பகுதி என்கின்றனர். பஞ்ச பாண்டவர்களான தர்மன், பீமன், அர்ச்சுனன், சகாதேவன், நகுலன் ஆகியோர் சகுனியிடம் சூதாட்டத்தில் சகுனியிடம் தோற்று , தங்கள் மனைவி திரெளபதியோடு வனவாசம் சென்றது அனைவரும் அறிந்ததே.

அவ்வாறு வனவாசம் செல்லும்போது தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை மரத்தின் அடியில் வைத்து சென்று விட்டதாகவும், பதினான்கு வருடங்கள் கழித்து, வனவாசம் முடித்து வந்தவுடன், புதைத்து சென்ற ஆயுதங்களை தோண்டி எடுத்து பூஜை செய்து வழிபட்டதாகவும் அதுவே இன்றைய ஆயுத பூஜை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
தன் வாழ்க்கையை வளமாக்கி கொண்டிருக்கும் தன் தொழிலையும், தன் வருங்காலத்தை வளமாக்க போகின்ற கல்வியையும் தெய்வமாக தொழுகின்ற நாள் தான் ஆயுத பூஜை. தன் வீட்டையும், தான் தொழில் செய்யும் இடத்தை தூய்மை செய்து , தொழிலுக்கு உபயோகின்ற அனைத்து உபகரணங்களை தெய்வமாக பாவித்து அவற்றையும் தூய்மையாக்கி தொழுது வருகின்றோம்.
மாணவர்கள் தங்கள் புத்தங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்குவோர். காலையில் இருந்து வீட்டை தூய்மை செய்து மாலையில் வீட்டை அலங்காரம் செய்து தன் வீட்டில் உள்ள அரிசி அளக்கும் படியில் இருந்து , அரிவாள் வரை சாமி அறையில் வைத்து வணங்கும் பழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.
தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி. அந்த மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று அழைப்பர். புரட்டாசி மாதத்தில் வரும் பிரதமை திதியை அடுத்து வரும் பத்து நாட்களில்தான் நம் முன்னோர் கொலு வைத்தனர். அதுவே இன்றும் பின்பற்றப்படுகிறது

ஓரறிவு ஜீவன்களில் இருந்து முனிவர்கள், தெய்வங்கள் வரை படிகளில் வைக்கப்படுகின்றன. இன்றைய நாட்களில் சமூகப் பிரச்சனைகளை கூட தங்கள் வீட்டுக் கொலுக்களில் வைக்கும் பழக்கம் பெருகி வருகிறது.
ஆயுத பூஜை (Ayutha Poja) என்றவுடன் பெரும்பாலானோர்க்கு நினைவிற்கு வருவது பொறியும், சுண்டலும் தான். கடவுள் வழிபாட்டின் பொழுது கலை வாழை இலையில் பொறி, சுண்டல் மற்றும் இனிப்பு வைத்து வழிபடுவர். அன்று பூஜை அறையில் தான் அனைத்து முக்கிய உபகரணங்களும் இருக்கும். மாணவர்கள் தங்கள் அனைத்து புத்தகங்களையும் பூஜை அறையில் சமர்பித்துவிடுவார். ஆயுத பூஜை அன்று படிக்கக் கூடாது என்றும் கூட சில பெரியோர்கள் கூற கேட்டது உண்டு.
அடுத்ததாக நாம் ஆயுத பூஜை அன்று செய்யும் மிக முக்கியமான செயல் நம் வாகனங்களை சுத்தப்படுத்துதல். நம் வாகனங்களை கழுவி அவற்றிக்கு பூமாலை இட்டு அவற்றையும் வழிபடுவோம். ஊர்களில் உள்ள அனைத்து ஆட்டோ நிறுத்தும் இடங்களிலும் கண்டிப்பாக “நான் ஆட்டோக்காரன்” பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்க விட்டு இருப்பர். அவர்கள் தங்கள் வாகனங்களில் முன்பு வாழைக் குருத்தை இருபுறமும் கட்டி வைப்பர்.

கொலுவின் கடைசி நாளான விஜயதசமி அன்று புத்தாக செய்யும் அனைத்து வேலைகளையும் தொடங்குவர். முக்கியமாக தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர் விஜயதசமி அன்று சேர்ப்பர். புதிய காரியங்களை அன்றைக்கு தொடங்குதல் மிகவும் நன்று என்று ஒரு நம்பிக்கை இன்னும் உள்ளது.
கிராமபுறங்களில் பத்தாவது நாளான அன்று மகர்நோன்பு என்று அழைக்கப்படும் அம்பு விடுதல் நிகழ்வு நடைபெறும்.மகர்நோன்பு திடல் என்று அழைக்கப்படும் மைதானத்தில் ஊரின் நான்கு திசைகளிலும் உள்ள கோயில்களில் இருந்து அலங்காரம் செய்து சாமி அழைத்து வரப்படும். அனைத்து கடவுளின் கையிலும் அம்பும், வில்லும் இடம் பெற்று இருக்கும். அந்த வில்லை கோவில்களின் பூசாரி கூட்டத்தினுள் விழுமாறு மேல் நோக்கி விடுவர். அந்தவில்லை பூஜை அறையில் வைத்து பூஜித்து வந்தால் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை நம் முன்னோர்களின் வழிகாட்டல் படி இன்றும் ஆயுத பூஜையை தமிழர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருவது பெருமகிழ்ச்சி. பழமை மாறாமல் இதுபோன்ற விழாக்களை நம் அடுத்த தலைமுறையினர்க்கும் எடுத்து செல்வது இன்றைய தலைமுறையினரின் தலையாய கடமை ஆகும்.
Recent Comments