Kavithai கவிதை
மழையில் தவிக்கும் குருவி
கிழிந்த மரக்கூரை,
பொழிந்த அடைமழை…
சிலிர்த்திடும் சிறகு,
உறைந்திடும் குளிரு…
அறிவுடை மானிடமே,
நீங்கள் பயனுறாவிடினும்
நாங்கள் இளைப்பாற
மரங்களையேனும் மிச்சமிடுங்கள்,
இயற்கையின் எச்சங்களாய்… – கவி பிரியை
——————————————————————————————————————————–
எம் தமிழன்னை
அ – வும் பா சுரக்கும்,
ஆவும் பாற்சுரக்கும்
எம் தமிழ் தீண்டிட மட்டுமே…
இதழும் தேன் வடிக்கும்,
ஈயுமதை மொய்த்திடும்
எம் அமுதை சுவைத்திட…
உயிரும் நெகிழ்ந்திடும்,
ஊனும் சிலிர்த்திடும்
எம் தமிழினப் பெருமையுணர…
எழிலும் ஏமாற்றமுறும்,
ஏளனமும் தலைகுனியும்
எம் தமிழினிமை காண…
ஐம்புலனும் சீறிடும்,
ஒற்றை மந்திரத்தில்…
ஓங்கிய இனமறைந்ததை மீட்க
ஔடதமாய் எழுந்ததே கீழடி… – கவி பிரியை
அ-தமிழெழுத்து, ஆ – பசு, பா- பாடல், பாற்சுரக்கும் – பால் சுரக்கும்
——————————————————————————————————————————–
மக்கட்செல்வங்கள்-குழந்தைகள்
தன் குழந்தைகளின்
மக்கட்செல்வங்களின்
தீண்டலில்,
முதுமையிலும்
புதுமை காணும்
மழலைப்பருவம்… – கவி பிரியை
——————————————————————————————————————————-
சுவையற்ற உணவுடன் அம்மாவின்
நினைவை மெல்லுகிறேன்…
நடைபாதையிடம் பெருமையுடன் அப்பாவின்
பாசத்தை சொல்லுகிறேன்…
தொலைபேசியில் தொலைதூரத்திற்கு
உருள்கின்றன உணர்வுகள்…
உருளும் உணர்வுகளால்
நிறைகின்றன விழிகள்…
பெருமை உணரும்
வெளியூர் வேலை,
சகிப்பில் திணறும்
உறவுகளை நினைக்கும் வேளை… – கவி பிரியை
——————————————————————————————————————————–
தாய்மை
கருவில் பூத்த உன்னை
கையில் ஏந்தத்தானே
கனவினிலே கணமும் கனத்து
காத்திருந்தேன் என் கண்ணே…!
என் உதிரத்தில் உருவுற்று
உலகில் உலவும் ஓர் உயிருன்னைத்
தீண்டி தாய்மை வரத்தையெண்ணி
தித்தித்தேன் என் திரவியமே…!
இன்றைய உன் அசைவினை
கருவில் நீ செய்தாயோ – நினைத்துப்
பார்க்கிறேன் என் பரம்பொருளே…!
என் நினைவோடையில் நீந்தும்
உன் எதிர்காலத்தை எட்டிப்பிடிக்க
ஏங்குகிறேன் என் எழிலே…! – கவி பிரியை
——————————————————————————————————————————–
நிழல்
பகலவன் பார்வை பட்டதும்
உன்னிலிருந்து உதித்த தரைபிம்பம் நான்…
கண்ணாடி பிம்பத்தை ரசனையின் உச்சத்தில் பார்க்கும் நீ,
என்னைப் பார்வையின் ஓரத்தில் ஒதுக்கியதன் காரணம் என்னவோ…?
உந்தனழகை உரைக்காத என்னுருவமா…,
பலரும் பரிந்துரைக்காத எந்நிறமா …
மதியாமல் நீ என்னை மிதித்து சென்றாலும்
உன்னையே சுற்றி உலவிக் கொண்டிருப்பேன்,
உன்னுருவத்தின் உடலில்லா உவமையாய்… – கவி பிரியை
——————————————————————————————————————————–
ஏ.பி.ஜே அப்துல்கலாம்
தென்கரை ஆழியில் எழுந்த ஆதவன்
இருண்ட பாரத்தை ஒளிரூட்டி
விண்னண வியப்பூட்ட விரைந்தானோ…
உப்பளத்தில் விளைந்த வைரமே,
விண்ணகத்தில்உமக்கு விலையேறியும்
தாய்தேசப் புகழை அண்டமறிவித்த தமிழ்மகனே…
ஆதவனாய் மறைந்திடினும் பல சாதனைகளில்
மிளிர்கிறாய் இன்றும் விண்மீன்களாய் இத்தேசத்தில்…
அழி-கடல்
அண்டம் – பிரபஞ்சம் – கவி பிரியை
——————————————————————————————————————————–
![]() |
Kavithai |
ஓடிஓடி யாரை ஆறுதல்படுத்த நின்றாயோ அவர்களாலே
——————————————————————————————————————————–
——————————————————————————————————————————–
தொலை விழியில்
நம்மை கொல்லும்
அக்னியும் அழகானவள்….
நெருங்கிய விழியில்
அழகு கொள்ளும்
நிலவும் கலங்கமானவள்…. – கவி பிரியை
——————————————————————————————————————————–
தாய்மை
பெண்மையின் முழுமை
உணர்கிறேன்…
காகிதத்தில் தீட்டிய உன்
கற்பனையுருவிற்கு
கணக்கில்லா முத்தம்…
கரமேந்தி அரவணைக்க
ஒத்திகையிடும் சித்தம்…
உன் தீண்டலில்
திளைத்து தினத்தை
எண்ணியெண்ணி(எண்ணிக்கை)
கழிக்கிறேன்…
உன் திருமுகம்காணும்
நாழிகையை கற்பனையில்
எண்ணியெண்ணி(நினைத்து)
களிக்கிறேன்…
களிக்கிறேன் – மகிழ்ச்சி – கவி பிரியை
——————————————————————————————————————————-
——————————————————————————————————————————–
ரணமிக்க கணம்
ரசிக்கத் தெரிந்த
மனம்,
ரணமிக்க கணத்திலும்
ருசியறியும்… – கவி பிரியை
——————————————————————————————————————————–
பாசம்
உதிரத்தில் இணைந்தால்
உறவு…
உள்ளத்தில் முளைத்தால்
நட்பு…
விதியது விதைத்தால்
காதல்…
விளிம்பின்றி் போகும்
செல்ல மோதல்…
எவரும் அறியா
ஆழம்…
உலகைக் கோர்க்கும்
பாலம்…
இலவசமாய் கிடைக்கும்
திரவியமே…
இறுக்கத்திலும் நீடித்தால்
இறைவரமே… – கவி பிரியை
——————————————————————————————————————————-
சமூக வலைதளம்
மீளவியலா சிக்கலுற்ற
வலை…
ஆறறிவு மனிதன்
அடிப்படையறிவை
தேடும் புதையல்…
லட்சியமதை
பொழுதுபோக்கில்
திளைக்கும் போதைத் திரள்…
இதை அடையார் மடையர்
என்றதொரு அறிவீன உலகு…
அவசியமதை ஆய்ந்து
களையெடுக்க பழகு…
அறிவீன – அறிவில்லாத
மீளவியலா – தப்ப முடியாத
அடையார்- அறியாதவர்
திளைக்கும் – திணிக்கும் – கவி பிரியை
——————————————————————————————————————————-
ஊடகஉறவு
அறியா முகங்களில் நெருக்கம்;
நெருங்கிய உறவினில் விலக்கம்…
நொடி பரவலில் தேவைகள்;
கோடி இன்னலில் பாவைகள்…
இறுக்கத்தில் பெறும் ஆறுதலாய்;
நெருடலாய் சேரும் சமூகமாறுதலால்…
உள்ளங்கை அடக்கியது உலகை;
மறந்தோம் அதிலடங்கா நம் உறவுகளை…
இன்னல்- துன்பம்
பாவைகள் – பெண்கள்
நெருடல் – பயத்துடன் பதற்றம் – கவி பிரியை
——————————————————————————————————————————-
Recent Comments